119 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 119 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 119 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில், அருவங்காடு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மாணவிகளின் பயன்பாட்டிற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து நாப்கின் எரியூட்டி பெறுவதற்காக ரூ.40,710 காசோலையை வழங்கினார்.
மாநில அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி பிரிவு), மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மலர்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.