போதைப்பொருட்களுக்கு எதிராக 11,950 மாணவ-மாணவிகள் உறுதிமொழி


போதைப்பொருட்களுக்கு எதிராக 11,950 மாணவ-மாணவிகள் உறுதிமொழி
x

போதைப்பொருட்களுக்கு எதிராக 11,950 மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

திருச்சி

உறுதிமொழி ஏற்பு

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 11,950 மாணவ-மாணவிகள் பங்கேற்று ஒரே இடத்தில் கூடிநின்று போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டு அரங்கம்

போதைப்பொருட்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். போதைப்பொருள் மட்டுமின்றி லாட்டரி விற்பனையை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமானத்துக்கு முதல்கட்ட பணி முடிந்து, 2-வது கட்ட பணிக்கு டெண்டர் விட்டுள்ளார்கள். சாலைகள் போட்டபிறகு மீண்டும் தோண்டுவதாக கூறப்படுவது தவறு. மழை பெய்து சாலைகளில் ஈரம் இருக்கும்போது தார் ஊற்றினால் ஒட்டாது. ஈரம் காய்ந்தபிறகு தான் தார் ஒட்டும். அதனால் தான் மீண்டும் தோண்டிவிட்டு சாலை போட வேண்டி உள்ளது.

தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு அரங்கம் உருவாக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். நல்ல தடகள வீரர்களை உருவாக்க ஆலோசனைகளை வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். கள்ளிக்குடி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக அந்த கட்டிடத்தை எந்தமாதிரி பயன்படுத்தலாம் என கலெக்டர், அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இது குறித்து முதல்-அமைச்சரிடமும் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலை நிகழ்ச்சிகள்

முன்னதாக மாணவ-மாணவிகள், காவலர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும், சென்னையில் நடந்த போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதி ஏற்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய காட்சி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த திரையில் ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.


Next Story