வங்கியில் ரூ.12 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக 4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்


வங்கியில் ரூ.12 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக  4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்
x

4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில்

ஈரோடு

வங்கியில் ரூ.12 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாக 4 பேருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

வங்கி கடன்

ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள சத்தி ரோட்டை சேர்ந்தவர் பொன்.சிவசாமி. இவருடைய மனைவி லதா, கோபியை சேர்ந்தவர் சுமதி, கருமாண்டி செல்லிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவர்கள் 4 பேரும் சேர்ந்து கோபியில் நகைக்கடை தொடங்கினார்கள்.

இதற்காக நகை, கட்டிடம், நிலம் போன்றவற்றை அடமானமாக வைத்து நம்பியூரில் உள்ள ஒரு வங்கியில் கடந்த 30.9.2009-ம் ஆண்டு ரூ.11 கோடியே 85 லட்சத்து 95 ஆயிரம் கடனாக பெற்றதாக தெரிகிறது.

அதன்பின்னர் கடந்த 2010-ம் ஆண்டு வங்கி அதிகாரிகள் நகை கடையில் ஆய்வு செய்த போது, பெறப்பட்ட கடன் தொகையை விட நகை மதிப்பு குறைவாக இருந்தது. மேலும் தொடர்ந்து வங்கி கடனை செலுத்தாததாலும் உடனடியாக கடன் தொகையை வட்டியுடன் 60 நாட்களுக்குள் செலுத்த நோட்டீஸ் கொடுத்தனர்.

3 ஆண்டு ஜெயில்

அதன் பின்னரும் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2011-ம் ஆண்டு வரை வட்டியுடன் சேர்த்து பொன்.சிவசாமி, லதா, சுமதி, சின்னசாமி ஆகியோர் ரூ.12 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 97 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், வங்கியை ஏமாற்றி விட்டதாகவும் 4 பேர் மீதும் கோபியில் உள்ள முதலாம் வகுப்பு கோர்ட்டில் வங்கி வழக்கு தொடர்ந்தது. மேலும் அடமானமாக வைக்கப்பட்ட சொத்துகளையும் வங்கி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. மாஜிஸ்திரேட் விஜய் அழகிரி வங்கியை ஏமாற்றிய பொன்.சிவசாமி, லதா, சுமதி, சின்னசாமி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகளும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story