கப்பல்மோதி விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 12 மீனவர்கள்


கப்பல்மோதி விசைப்படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த 12 மீனவர்கள்
x

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கப்பல் மோதி குமரியை சேர்ந்த விசைப்படகு கடலில் மூழ்கியது. காயங்களுடன் தத்தளித்த 12 மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் மீட்டனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது கப்பல் மோதி குமரியை சேர்ந்த விசைப்படகு கடலில் மூழ்கியது. காயங்களுடன் தத்தளித்த 12 மீனவர்களை மாலத்தீவு கடற்படையினர் மீட்டனர்.

மீன்பிடிக்க சென்றனர்

குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பைஜூ. இவருக்கு சொந்தமாக விசைப்படகில் கடந்த 7-ந் தேதி 12 மீனவர்கள் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் ஆழ்கடலில் பிடித்த மீன்களை விற்பனை செய்வதற்காக தேங்காப்பட்டணம் துறைமுகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று திடீரென விசைப்படகு மீது மோதியது. அதன்பின்னர் அந்த கப்பல் நிற்காமல் சென்று விட்டது. இதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

அவர்கள் கடலில் நீந்தியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் விட்டு விட்டு சென்றனர்.

மீட்டு வர கோரிக்கை

இதுபற்றி தகவல் அறிந்த விசைப்படகின் உரிமையாளர் பைஜூ குளச்சல் மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து, 'தீவில் இருக்கும் மீனவர்களை மீட்டு வர வேண்டும். மேலும், பல லட்சம் மதிப்பிலான விசைப்படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், பிடித்து வரப்பட்ட மீன்கள் கடலில் மூழ்கி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விசைப்படகு மீது மோதிய கப்பலை அடையாளம் கண்டு உரிய இழப்பீடு பெற்று தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.

ஆழ்கடலில் கப்பல் மோதி குமரி விசைப்படகு மூழ்கிய சம்பவம் மீனவ கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story