வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள்


வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள்
x

வேலூர் மாவட்ட இறுதி பட்டியலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டார். இந்த பட்டியலின்படி 12 லட்சத்து 74 ஆயிரத்து 466 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர்

சிறப்பு முகாம்

வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு நவம்பர் 9-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 8-ந் தேதி வரை படிவங்கள் பெறப்பட்டது.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில் மொத்தம் 38,122 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இறுதிவாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல்

இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். வருகிற 6-ந் தேதி முதல் தொடர் சுருக்க திருத்த முறை அமல்படுத்தப்படுவதால் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் அளிக்க விடுப்பட்ட நபர்கள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஆகியோரிடம் நேரடியாக படிவங்களை அளிக்கலாம்.

மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ அல்லது Voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவோ அளிக்கலாம் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.


Next Story