12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு


12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு
x

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 150 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவத்தில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 150 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

9½ லட்சம் டன் நெல் கொள்முதல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகங்கள் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 327 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 9 லட்சத்து 48 ஆயிரத்து 800 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை காலதாமதம் இன்றி வழங்கப்படுகிறது.

குறுவை நெல் அறுவடை

விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விலையும், போதிய வருமானமும் கிடைப்பதால் தனியார் வியாபாரிகளிடம் நெல்லை விற்பனை செய்வதை காட்டிலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். நடப்பு ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.இதுவரை 25 ஆயிரம் ஏக்கரில் நெல் அறுவடை முடிவடைந்துள்ளது. அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த மாத தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக அக்டோபர் முதல் வாரத்தில் தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் தொடங்கும்.

150 கொள்முதல் நிலையங்கள் திறப்பு

அதுவரை அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்கள் முன்பு கொட்டி குவித்து வைத்து விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு முன்கூட்டியே கடந்த 1-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.இதுவரை மாவட்டம் முழுவதும் 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. நெல்லுக்கு புதிய விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஊக்கத்தொகையுடன் புதிய விலைப்பட்டியலின் படி, கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது சன்னரக நெல்லுக்கு தமிழகஅரசின் ஊக்கத்தொகை ரூ.100 சேர்த்து ரூ.2,160-ம், பொது ரக நெல்லுக்கு தமிழகஅரசின் ஊக்கத்தொகை ரூ.75 சேர்த்து ரூ.2,165-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.100 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு

கொள்முதல் குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் குறுவை நெல்லை கொள்முதல் செய்ய தேவைப்படும் இடங்களில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தற்போது 1 லட்சத்து 98 ஆயிரம் டன் நெல் மாவட்டம் முழுவதும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டு 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்து வருகிறோம். நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Next Story