வீட்டின் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை மாயம்
ஜோலார்பேட்டை அருகே வீட்டின் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூரை அடுத்த வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்த நாட்டறம்பள்ளி அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் இருவரும் அன்று மாலையே வீட்டிற்கு வந்தவுடன் கலைச்செல்வி தன்னுடைய 12 பவுன் நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று பீரோவை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து கலைச்செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு நகைகள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதனால் ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர்கள் கள்ளச்சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து நகையை திருடிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.