குலசேகரன்பட்டினத்தில் 4 பெண்களிடம் 12½ பவுன் நகை பறிப்பு


தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் 4 பெண்களிடம் 12½ பவுன் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் 4 பெண்களிடம் தாலிச்சங்கிலி உள்பட 12½ பவுன் நகைகளை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தசரா திருவிழா

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 5-ந்தேதி நடந்தது. இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி கோவில் வளாகம், கடற்கரை பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களில் கூட்டநெரிசல் காணப்பட்டது.

தாலி சங்கிலி பறிப்பு

இந்த நெரிசலை பயன்படுத்தி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் முன்புறத்தில் சாமி கும்பிட சென்ற வேப்பங்காடு ராமசாமிபுரத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 55) அணிந்திருந்த 6½ பவுன் தாலிச்சங்கிலி, ஸ்ரீவைகுண்டம் பேரூர் தெற்கு தெருவைச் சேர்ந்த கொம்பையா மனைவி சண்முககவி (21) அணிந்திருந்த அரை தங்கசங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதேபோன்று குலசேகரன்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள நாகர்கோவில் பஸ்நிறுத்தம் அருகே கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி ஈச்சன்விளையைச் சேர்ந்த வேணி ஐஸ்வர்யா (31) அணிந்திருந்த 3¼ பவுன் தாலிச்சங்கிலி, குலசேகரன்பட்டினம் சிவன் கோவில் அருகே கடற்கரை செல்லும் சாலையில் ஈரோடு மாவட்டம் பவானி செம்படாபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி அணிருந்த 2½ பவுன் காதுமாட்டி, கைச்சங்கிலியையும் மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுதொடர்பாக நகைகளை பறிகொடுத்த பெண்கள் தனித்தனியாக குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்டநெரிசலை பயன்படுத்தி நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.


Next Story