ரூ.50 ஆயிரத்துக்காக ஆடு மேய்த்த 12 வயது சிறுவன் மீட்பு
ராமநாதபுரம் அருகே ரூ.50 ஆயிரத்துக்காக ஆடு மேய்த்த சிறுவன் மீட்கப்பட்டு உள்ளான்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ள மட்டியனேந்தல் கண்மாய் பகுதியில் சில மாதங்களாக ஒரு சிறுவன் ஆடுமேய்த்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையினர், தொழிலாளர் நலத்துறையினர், சைல்டுலைன் அமைப்பினர் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 120 ஆடுகளை 12 வயது சிறுவன் மேய்த்து கொண்டிருந்தான். அவனிடம் விசாரித்தபோது, அவன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவன் என தெரிய வந்தது. தந்தை இறந்து விட்டதால் தாயாருடன் செங்கல்சூளையில் வேலை பார்த்து வந்ததும், இதுவரை பள்ளிக்கு சென்றதில்லை எனவும் தெரிய வந்தது. புரோக்கர் மூலம் ரூ.50 ஆயிரத்துக்காக ஒரு ஆண்டுக்கு முன்பே முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ஆடுகளை மேய்க்க அழைத்து வரப்பட்டதாகவும் சிறுவன் கூறினான். அவனுக்கு 2 அக்காள் இருப்பதாகவும் அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டதாகவும் அண்ணன் ஒருவன் இதுபோன்று தொழில் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளான்.
சிறுவனை அதிகாரிகள் மீட்டு பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் மூலம் மீட்பு சான்றிதழ் பெற்று ராமநாதபுரத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். கொத்தடிமை தொழிலாளராக இருந்து மீட்கப்பட்டுள்ள சிறுவனுக்கு அரசு வழங்கும் உதவித்தொகையை பெற ஆதார்கார்டு போன்றவை இல்லாததால் அதனை பெறும் முயற்சியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறுவனை கொத்தடிமையாக வைத்திருந்த பெருமாள் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பெருமாளை தேடிவருகின்றனர்.