1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜித் மேரி தலைமையில் ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி உள்ளிட்ட போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆர்.எஸ். மங்கலம் விலக்கு பகுதியில் அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இந்த சோதனையில் அந்த வாகனத்தில் தலா 40 கிலோ எடையுள்ள 30 பைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வேன் டிரைவர் கடலாடி ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமபாண்டி (வயது30) என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்த போலீசார் இந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்ல காரணமாக இருந்த நபரை தேடி வருகின்றனர்.