1,200 கிலோ ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்
1,200 கிலோ ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, கார்த்தி மற்றும் போலீசார் ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே காங்கயம் பிரிவு ரோட்டில் ரேஷன் பொருட்கள் பதுக்கல் தொடர்பாக வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அதற்குள் காரை நிறுத்தி விட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் காரில் சோதனை செய்தபோது, காருக்குள் மூட்டை, மூட்டையாக மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில், காரை ஓட்டி வந்தது திருப்பூர் அருகே மானூர் பல்லநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பதும், அவர் ரேஷன் பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரமேசை போலீசார் தேடி வருகிறார்கள்.