ஒரேநாளில் 1,200 டன் குப்பைகள் அகற்றம்
திருப்பூர் மாநகரில் ஆயுதபூஜையையொட்டி ரோட்டோரம் குவிந்த 1,200 டன் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டது. இதை மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
ஆயுதபூஜை
தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. தொழில் நிறுவனங்கள் அதிகம் நிறைந்த திருப்பூரில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
வீடுகள், வர்த்தக நிறுவனங்களிலும் எந்திரங்களுக்கு ஆயுதபூஜை செய்து சாமிதரிசனம் செய்தனர். அதுபோல் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கும் பூஜை செய்து வழிபட்டனர். வீடுகள், தொழில் நிறுவனங்கள், வாகனங்களின் முன்புறம் வாழைக்கன்றுகளை கட்டி அலங்காரம் செய்தனர். இதற்காக திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாலையோரங்களில் வாழை மரக்கன்றுகளை குவித்து விற்பனை செய்தனர். பூக்கள், பழங்கள் விற்பனையும் கனஜோராக நடைபெற்றது.
1,200 டன் குப்பை அகற்றம்
விற்பனை நிறைவடைந்ததும், மீதம் இருந்த வாழைமரக்கன்றுகளை அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர். பிரதான சாலையோரம் குவிந்த வாழைமரக்கன்று குவியல், பூக்கள் உள்ளிட்ட குப்பைகள் டன் கணக்கில் தேங்கியது. இதை கவனித்த திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அவற்றை இரவோடு, இரவாக அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம், பெருமாள் கோவில் வீதி உள்ளிட்ட பிரதான சாலையோரம் குவிந்த குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. அதை மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, கவுன்சிலர் கண்ணப்பன் ஆகியோர் பார்வையிட்டனர். ஒரேநாளில் 1,200 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரவேற்பு
கடந்த ஆண்டு ஆயுதபூஜை முடிந்து 2 நாட்கள் இதுபோன்ற குப்பைகள் மாநகர பகுதியில் குவிந்து கிடந்தது. அதை அதிகாரிகள் அகற்றினார்கள். இந்த முறை உடனடியாக அகற்றப்பட்டதால் பெரும்பாலான பிரதான சாலைகளில் குப்பைகள் தேங்காமல் காணப்பட்டது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.