121 தீட்சிதர்கள் பங்கேற்ற அதிருத்ர ஜெப பாராயணம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 121 தீட்சிதர்கள் பங்கேற்ற அதிருத்ர ஜெப பாராயணம் நடைபெற்றது.
சிதம்பரம்,
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுக்கு 6 மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் வருகிற 11-ந் தேதி(வியாழக்கிழமை) நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 1-ந் தேதி காலை நடராஜர் கோவில் கொலு மண்டபத்தில் அதிருத்ர ஜெப பாராயணம் நடைபெற்று வருகிறது. இதில் 121 தீட்சிதர்கள் கலந்து கொண்டு 11 முறை அதிருத்ர ஜெப பாராயணம், மந்திரங்களை ஓதி நடத்தி வருகின்றனர். தொடர்ந்து வருகிற 10-ந் தேதி வரை அதிருத்ர ஜெப பாராயணம் நடைபெறுகிறது.
பின்னர் மறுநாள்(வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சிவகாம சுந்தரிக்கும், ஆனந்த நடராஜருக்கும் லட்சார்ச்சனை, காலை 10 மணிக்கு மகா ருத்ர ஜப பாராணம், மதியம் 2 மணிக்கு மேல் மகா ருத்ர ஜெப ஹோமம், வடுக பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஷ்வ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பல்வேற மற்றும் மகா தீபராதனை நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.