பெட்ரோல் பங்கின் கதவை உடைத்து ரூ.1.25 லட்சம் கொள்ளை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் பெட்ரோல் பங்கில் இருந்து ரூ.1.25 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரையை சேர்ந்தவர் இ.கே.கோதண்டன். தொழிலதிபரான இவர் வடமதுரை ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் வடமதுரை பெரிய காலனி அருகே நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தி வருகிறார். இதில்,மேனேஜராக தனசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருடன் இருவர் நேற்று பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் நேற்று விற்பனையான தொகையில் ரூ.1.25 லட்சத்தை இன்று காலை வங்கியில் செலுத்த எண்ணி கல்லாவில் வைத்து பூட்டிவிட்டு இரவு 11.30 மணிக்கு மூன்று பேரும் பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
பின்னர் இன்று விடியற்காலை எழுந்து பார்த்தபோது அறையின் கதவை மர்மநபர்களால் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ரூ.1.25 லட்சம் மற்றும் சிசிடிவி கேமராவிற்கு பொருத்தப்பட்டிருந்த டிவிடி உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் தனசேகர் புகார் செய்தார். பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்,கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்துகொண்டு சென்றனர்.
கடந்த சில மாதங்களாக அப்பகுதிகளில் கொள்ளைச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். எனவே, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.