போக்குவரத்து விதிமீறிய 125 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்


போக்குவரத்து விதிமீறிய 125 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதியை மீறிய 125 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

தீபாவளி பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதியை மீறிய 125 ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு சோதனை

தீபாவளி பண்டிகை கடந்த 24-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருக்கும் பலர் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் வேலூர் சரக இணை போக்குவரத்து கமிஷனர் இளங்கோவன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி, வாலாஜா, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ராமலிங்கம், காளியப்பன், துரைசாமி ஆகியோரின் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், விஜயகுமார், வெங்கட்ராகவன் மற்றும் பலர் கடந்த 18-ந் தேதி முதல் நேற்று முன்தினம் அதிகாலை வரை சோதனையில் ஈடுபட்டனர்.

125 பஸ்களுக்கு அபராதம்

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதா?, அதிகமான பயணிகள் பயணம் செய்கிறார்களா?, டிரைவர் சீருடை அணிந்துள்ளாரா?, தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டுள்ளதா?, முகப்பு விளக்கில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது உள்பட பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் சாலை வரி, பிறமாநில ஆம்னி பஸ்கள் நுழைவு வரியை முறையாக செலுத்தி உள்ளார்களா என்றும் சோதனை செய்யப்பட்டது.

8 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையில் 814 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 125 பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ.69 ஆயிரத்து 800 வரி வசூலிக்கப்பட்டது. ரூ.40 ஆயிரத்து 800 வரி நிர்ணயிக்கப்பட்டது. வரி செலுத்தாத ஆம்னி பஸ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story