மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 12,500 வேட்டி-சேலைகள் மாயம் - மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
மதுரை கலெக்டர் அலுவலக குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பூட்டு போடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
மதுரை,
பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு இலவச-வேட்டி சேலைகள் வழங்கப்படும். அந்த வகையில் மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்ட மக்களுக்காக வழங்க 12 ஆயிரத்து 500 வேட்டி-சேலைகள் கடந்த அக்டோபர் மாதம் கொள்முதல் செய்யப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் லாரிகள் மூலம் நேற்று மேலும் இலவச வேட்டி-சேலைகள் கொண்டு வரப்பட்டன. அப்போது அதிகாரிகள் பூட்டை திறக்க முயன்றனர். ஆனால் திறக்க முடியவில்லை. நீண்ட நேரம் போராடியும் பயன் இல்லை. குடோனில் ஏற்கனவே இருந்த பூட்டு உடைக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பூட்டு போடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டனர். உடனே அந்த பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த 12 ஆயிரத்து 500 இலவச வேட்டி-சேலைகள் காணாமல் போனது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் இருக்கும்.
இது குறித்து அதிகாரிகள், கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். கலெக்டர் சங்கீதா, உடனடியாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.