13 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு
நன்னிலம் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது 13 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
நன்னிலம்:
நன்னிலம் அருகே குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது 13 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
குடிநீர் குழாய் பதிக்கும் பணி
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நெம்மேலியை அடுத்த கள்ளுக்குடி கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று கள்ளுக்குடி கிராமத்தில் குச்சிபாளைய தெருவில் பெருமாள் கோவில் அருகில் குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லின் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது ஏதோ பித்தளை பொருள் அடியில் இருப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து பொக்லின் எந்திர டிரைவர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து பள்ளம் தோண்டியுள்ளார். அப்போது பள்ளத்தில் முதலில் ஒரு சாமி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
13 சாமி சிலைகள்
பின்னர் தொடர்ந்து அங்கு தோண்டி பார்த்தபோது 10-க்கும் மேற்பட்ட சாமி சிலைகள் இருந்தது தெரிய வந்தது. இதில் விநாயகர், நடராஜர், துர்க்கை, சுந்தரர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், கிருஷ்ணர், 6 அம்மன் சிலைகள் என மொத்தம் 13 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவைகள் 1 அடி முதல் 3 அடி வரை உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தாசில்தார் ஜெகதீசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து சிலைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த சிலைகளை மீட்டு நன்னிலம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
ஐம்பொன் சிலைகள்
அங்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை தொல்லியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், கண்டெடுக்கப்பட்ட சாமி சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னாலானவை என்றும், அவை கிபி. 14-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜய நகர பேரரசு காலத்தில் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தனர்.
குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சாமி சிலைகள் கிடைத்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.