தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத பணி: திருச்சி ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 13 பேர் கைது..!
தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீத பணி வழங்கக்கோரி திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இளைஞர் பெருமன்றத்தினர் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக இன்று திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களுக்கு 90 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணி இடங்களை தமிழக இளைஞர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும், பகத்சிங் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
நகர்ப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் அரசு பணியாளர்களின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தியதை மீண்டும் 58-ஆக மாற்ற வேண்டும், சிறு மற்றும் குறுந் தொழில்களை தொடங்க இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கோஷம் எழுப்பியவாறு ஜங்சன் ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் முயற்சியில் முன்னேறி சென்றனர்.
அவர்களை முன்னேற விடாமல் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் தடுத்தனர். மேலும் பேரிகாட் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஏறிய நின்றபடி கோஷம் எழுப்பினர். அதன் பின்னர், போராட்டம் நடத்தியவர்களில் 13 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.