2 வீடுகளில் 13 பவுன் நகைகள் திருட்டு
2 வீடுகளில் 13 பவுன் நகைகள் திருட்டுபோனது.
துறையூர்:
நகைகள் திருட்டு
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள புத்தனாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மலர்கொடி(வயது 55). இவரது கணவர் மற்றும் மகன் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மலர்கொடி மற்றும் அவரது மருமகள் ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவை திறந்து அதில் இருந்த தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம், தோடு உள்பட மொத்தம் 9½ பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அன்று அப்பகுதியில் உள்ள மாலாதேவி(63) என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்திருந்த சங்கிலி உள்பட 3½ நகையை திருடிச்சென்றனர். இது குறித்து மலர்கொடி மற்றும் மாலாதேவி ஆகியோர் தனித்தனியே ெகாடுத்த புகாரின்பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மணல் கடத்திய லாரி பறிமுதல்
*காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் எம்.புத்தூர் பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்தபோது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவரும், அவருடன் வந்தவரும் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் லாரியில் மணல் கடத்தி வரப்பட்டதும், தப்பியோடியவர்கள் ஏலூர்பட்டியை சேர்ந்த ராஜ்குமார், மாகாளிப்பட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பதும் தெரியவந்தது.
*திருச்சி சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ஆனந்தபாபு(32) நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய மொபட்டில் சென்றார். ரெங்கா, ரெங்கா கோபுரம் அருகே மொபட்டை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரது மொபட்டை ஒருவர் திருடிச்செல்ல முயன்றதை கண்ட அவர், அந்த நபரை பிடித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், அவர், மலைக்கோட்டை சறுக்குப்பாறையை சேர்ந்த சுந்தர்ராஜன்(51) என்பது தெரியவந்தது. இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
குழிக்குள் விழுந்த கன்றுக்குட்டி
*துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நாடக மேடை பின்புறத்தில் ஒரு கட்டிட பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த வழியாக வந்த கன்றுக்குட்டி ஒன்று சுமார் 8 அடி ஆழ குழிக்குள் விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து கயிறு கட்டி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர்.
*திருச்சி, கிராப்பட்டி அன்பிலார் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்த சுரேஷின் மனைவி மரியபுஷ்பா(வயது 36). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தலைவலியால் அவதிப்பட்டு வந்த புஷ்பா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.