குப்பைகளை அகற்ற ரூ.1 கோடியில் 13 வாகனங்கள்
குடியாத்தம் நகரில் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ரூ.1 கோடியில் 13 புதிய வாகனங்கள் வாங்கப்பட உள்ளது என நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி தலைவர் தெரிவித்தார்.
நகரமன்ற கூட்டம்
குடியாத்தம் நகரமன்ற கூட்டம் இக்கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், மேலாளர் சுகந்தி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-
ஜி.எஸ்.அரசு: குடியாத்தம் பகுதியில் சொத்துவரி, குழாய்வரி உள்ளிட்ட வரி செலுத்த பல வீடுகளில் வாரசுதாரர்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.
நவீன்சங்கர்: பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பேனர் தொழில் நம்பி உள்ள நூற்றுக்கணக்கானோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் நகராட்சியே குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து குறிப்பிட்ட அளவுகளில் பேனர் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.
செதுக்கரை வைத்தீஸ்வரன்நகர் பகுதியில் பூங்கா அருகில் உள்ள அம்மன் ஏரிபகுதியில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி விட்டு செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்டபாணி: கவுண்டன்யாமகாநதி ஆற்றங்கரையில் நெல்லூர்பேட்டை, பாவோடும்தோப்பு பகுதியில் ஆக்கிரமித்து கட்டி இருந்த வீடுகளை கடந்த ஆண்டு அகற்றிவிட்டனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக பெரும்பாடி ரோடு பகுதியில் உள்ள நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலங்களில் வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோமோகன்: பல மாதங்களாக நாய்கள் தொல்லை குறித்து மன்ற கூட்டத்தில் பேசியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக நாய்கள் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பெரும்பாலான உறுப்பினர்கள், பல இடங்களில் குப்பைகள் பலநாட்களாக அகற்றப்படவில்லை என குற்றம் சாட்டி குப்பைகளை தினமும் அகற்றவேண்டும் என வலியுறுத்தினர்.
நகர்மன்ற தலைவர் பதில்
உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் பேசியதாவது:-
கெங்கையம்மன் தேர் மற்றும் சிரசு ஊர்வலம் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலைகள் சீரமைக்கப்படுவதோடு, புதிதாக தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சொத்துவரி, குழாய்வரி உள்ளிட்ட வரி வகைகளை பெயர் மாற்றம் செய்ய 6 வார்டுகளுக்கு ஒரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம். குடியாத்தம் பகுதியில் குப்பைகளை அகற்ற சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 வாகனங்கள் வாங்கப்பட உள்ளன விரைவில் இந்த வாகனங்கள் வரும் அப்போது குடியாத்தம் தூய்மையான நகராக மாறும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும்.
கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேனர் வைப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டத்தில் அடிப்படை வசதிகளான வடிகால் சீர்படுத்துதல், சுகாதார வசதி ஏற்படுத்துதல், சிறுபாலங்கள் அமைத்தல் சிறு மின்விசை பம்புகள் சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.