13 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன
பந்தலூர் அருகே 13 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உப்பட்டி அருகே சேலக்குன்னு பகுதியில் குட்டிகளுடன் 13 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. தொடர்ந்து அங்கு பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. மேலும் அன்னகுட்டி என்பவரது தோட்டத்தில் பாக்கு, வாழை, தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. மேலும் குடியிருப்புகளை முற்றுகையிட்டதால், அவசர தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தகவல் அறிந்த பிதிர்காடு உதவி வனபாதுகாவலர் கிருபாகரன் உத்தரவின் படி, வனகாப்பாளர் ராமசந்திரன், வேட்டை தடுப்பு காவலர் கலைக்கோவில் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் தேயிலை தோட்டத்திற்குள் 4 காட்டு யானைகள் புகுந்தன. இதனால் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் அய்யனார் உத்தரவின்படி, வனவர் சிவகுமார், வனகாப்பாளர் தம்பகுமார் மற்றும் வேட்டைதடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.