ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 130 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக ஆம்னி பஸ்சில் கடத்தி வந்த 130 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்னி பஸ்
நெல்லை மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், துணை கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), சரவணக்குமார் (மேற்கு) ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மேலப்பாளையம் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த ஆம்னி பஸ்சை போலீசார் மறித்துள்ளனர். ஆனால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
130 கிலோ புகையிலை
இதனையடுத்து போலீசார் காரில் பின்தொடர்ந்து சென்று சிறிது தூரத்தில் பஸ்சை மடக்கி பிடித்தனர்.
பின்னர் பஸ்சில் சோதனை செய்தபோது 10 பண்டல்களில் சுமார் 130 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும், அவற்றை பெங்களூருவில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதனையடுத்து பஸ் டிரைவரான பெங்களூருவை சேர்ந்த ராகவேந்திரா (வயது 39), அருண்குமார் (34), ராஜ் (23) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தங்கவேல் மகன் ராமதாஸ் (36) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பறிமுதல்
மேலும் புகையிைல பொருட்கள், ஆம்னி பஸ்சை பறிமுதல் செய்த போலீசார் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பார்வையிட்டார்.
அப்போது, அவர் கூறுகையில், 'புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். புகையிலை பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.