நீலகிரியில் 130 போக்சோ வழக்குகள் பதிவு
நீலகிரியில் 130 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட நீதிபதி முருகன் சட்ட விழிப்புணர்வு முகாமில் தெரிவித்தார்.
கூடலூர்,
நீலகிரியில் 130 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்று மாவட்ட நீதிபதி முருகன் சட்ட விழிப்புணர்வு முகாமில் தெரிவித்தார்.
130 போக்சோ வழக்குகள்
கூடலூர் அருகே சளிவயல் மில்லிகுன்னு ஆதிவாசி கிராமத்தில் சட்ட உதவி மையம் சார்பில், இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட நீதிபதி முருகன் தலைமை தாங்கினார். கூடலூர் சார்பு நீதிபதி ஸ்ரீதர், கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் ஆகியோர் கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், நீதிமன்றம் மற்றும் இலவச சட்ட உதவி மையத்தை பழங்குடியின மக்கள் எவ்வாறு அணுகி பயன்பெறுவது குறித்து விளக்கினர்.
முகாமில் மாவட்ட நீதிபதி முருகன் பேசியபோது கூறியதாவது:-
பழங்குடியின மக்கள் மத்தியில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 130 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 90 வழக்குகள் கூடலூர், பந்தலூர் பகுதியில் பதிவானது. இதில் அதிகமாக பழங்குடியின மக்கள் தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்த வயதில் திருமணம் செய்வது வழக்கமாக உள்ளது. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும்.
விழிப்புணர்வு வேண்டும்
இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால் திருமணம் செய்துகொண்டு குழந்தை பேறுக்காக மருத்துவமனை செல்லும் போது டாக்டர்கள் காவல் துறைக்கு தகவல் அளிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் போக்சோ வழக்கு பதிவு செய்யும்போது, 2 குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த பிரச்சினை உயர்நீதிமன்ற கவனத்திற்கு சென்றுள்ளது. இதனால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழங்குடியின பெண்களின் திருமண வயது மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாக உள்ளது.
எனவே, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இலவச சட்ட உதவி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வீடு, சாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட நீதிபதியிடம் பழங்குடியின மக்கள் அளித்தனர். முகாமில் கூடலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெய்னுல்பாபு, வக்கீல்கள் விஜயகுமார், மயில்சாமி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், ஆதிவாசி மக்கள் கலந்துகொண்டனர்.