6 மாதத்தில் 1,310 கோடி யூனிட் மின் உற்பத்தி: என்.எல்.சி. நிகர லாபம் ரூ.873 கோடி அதிகாரி தகவல்

என்.எல்.சி. நிறுவனம் 6 மாதத்தில் 1,310 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளதாகவும், ரூ.873 கோடி நிகரலாபம் ஈட்டியுள்ளதாகவும் நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி,
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவன தலைவர் ராக்கேஷ் குமார் பேசியதாவது:-
என்.எல்.சி. நிறுவனம் கடந்த 1.4.2022 முதல் 30.9.2022 வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் 1,310 கோடியே 49 லட்சம் யூனிட் மின் சக்தியை உற்பத்தி செய்துள்ளது. கடந்த 2021-22-ம் நிதி ஆண்டின் முதல் 6 மாதகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி அளவான 1,304 கோடியே 32 லட்சம் யூனிட்டை விட, இது 0.47 சதவீதம் அதிகமாகும். அத்துடன் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து முதல் அரையாண்டில் ஒட்டுமொத்தமாக 1,431 கோடியே 29 லட்சம் யூனிட் மின் சக்தியை ஏற்றுமதி செய்து, முந்தைய 2021-22-ம் ஆண்டில் மேற்கொண்ட 1,388 கோடியே 71 லட்சம் யூனிட்டை விட 3.07 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
165 சதவீதம் அதிகம்
பழுப்பு நிலக்கரி உற்பத்தியை பொறுத்தவரை 30.9.2022 அன்று நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 124 லட்சத்து 42 ஆயிரம் டன் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் 116 லட்சத்து 42 ஆயிரம் டன் மட்டுமே எடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்நிறுவனம் 49 லட்சத்து 75 ஆயிரம் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டின் இதே காலத்திற்கான உற்பத்தியானது 18 லட்சத்து 76 ஆயிரம் டன் மட்டுமே. இது முந்தைய ஆண்டைவிட 165.19 சதவீதம் அதிகமாகும்.
மேலும் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்திய அனல் மின் நிலையங்களின் சராசரி மின் உற்பத்தி திறனானது 64.49 சதவீதமாக இருந்த நிலையில், என்.எல்.சி. இந்தியா நிறுவன அனல் மின் நிலையங்கள் 74.66 சதவீத உற்பத்தி திறனுடன் இயங்கியுள்ளன.
நிகர லாபம்
இதன் மூலம் என்.எல்.சி. நிறுவனம், நடப்பு நிதியாண்டின் (2022-23) முதல் அரையாண்டில் ரூ.5,997 கோடியே 68 லட்சத்தை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது. கடந்த 2021-22ம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற்கான, மொத்த வருவாயான ரூ.5,377 கோடியே 11 லட்சத்தை விட இது, 11.54 சதவீதம் அதிகமாகும்.
இதுதவிர கடந்த நிதியாண்டில் ஈட்டிய நிகரலாபமான ரூ.567 கோடியே 43 லட்சத்தை விட, 53.90 சதவீதம் அதிகமாக ரூ.873 கோடியே 29 லட்சத்தை நிகரலாபமாகப் பெற்றுள்ளது என்றார்.






