புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,313 மில்லி மீட்டர் மழைப்பொழிவு


புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,313 மில்லி மீட்டர் மழைப்பொழிவு
x

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,313 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதில், குடிசை உள்பட 4 வீடுகள் சேதமடைந்தன.

புதுக்கோட்டை

கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் பரவலான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இரவு முழுவதும் விடிய, விடிய பெய்தது. பகலில் பரவலாக பெய்த நிலையில் இரவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

புதுக்கோட்டை நகரப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பின. மேலும் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது. மண் சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. சாலைகளில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

4 வீடுகள் சேதம்

பலத்த மழையின் காரணமாக மாவட்டத்தில் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்ததால் நேற்றும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை ஒரே நாளில் மொத்தம் 1,313.60 மில்லி மீட்டர் அளவு மழை பெய்திருந்தது. இதில் அதிகபட்சமாக பொன்னமராவதியில் 133 மில்லி மீட்டர் அளவு பதிவாகியிருந்தது. குறைந்தபட்சமாக மணமேல்குடியில் 21.50 மி.மீ. பதிவானது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையில் குடிசை உள்பட 4 வீடுகள் சேதமடைந்தன. ஒரு மாடு, ஒரு ஆடு என 2 கால்நடைகள் இறந்தன. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை தூறியபடி இருந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தான் முதன்முதலாக அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழையளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-23.30, பெருங்களூர்-60.80, புதுக்கோட்டை-70, ஆலங்குடி-54.10, கந்தர்வகோட்டை-25.40, கறம்பக்குடி-52.60, மழையூர்-45.60, கீழணை-85.40, திருமயம்-78, அரிமளம்-77.60, அறந்தாங்கி-44.50, ஆயிங்குடி-40.20, நாகுடி-32.60, மீமிசல்-30.80, ஆவுடையார்கோவில்-32.80, மணமேல்குடி-21.50, இலுப்பூர்-56.60, குடுமியான்மலை-70.90, அன்னவாசல்- 60.60, விராலிமலை-48, உடையாளிப்பட்டி-23.20, கீரனூர்-34.50, பொன்னமராவதி-133, காரையூர்-111.60.


Related Tags :
Next Story