ஒரே நாளில் 132 கடைகளுக்கு 'சீல்'


ஒரே நாளில் 132 கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி நகராட்சியில் ஒரே நாளில் வாடகை செலுத்தாத 132 கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி நகராட்சியில் ஒரே நாளில் வாடகை செலுத்தாத 132 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

வாடகை நிலுவை

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடந்த 1.7.2016 முதல் வாடகை மறு நிர்ணயம் செய்து உயர்த்தப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளில் நிலுவை வாடகை செலுத்துவதாக உறுதியளித்தும், வியாபாரிகள் முழுமையாக செலுத்தாமல் இருந்து வந்தனர்.

தொடர்ந்து 4 ஆண்டுகளாக நிலுவை வாடகை ரூ.40 கோடி செலுத்தாததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 757 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீல் வைத்த கடை வியாபாரிகளில் ஒரு சிலர் முழு தொகையையும், ஒரு சிலர் பாதித்தொகையையும் செலுத்தியதை தொடர்ந்து சீல்கள் அகற்றப்பட்டன.

132 கடைகளுக்கு 'சீல்'

இதன் பின்னர் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினார்கள். அத்துடன் அவர்கள் வாடகை செலுத்த இந்த மாதம் வரை காலக்கெடுவும் வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் வாடகையை செலுத்துவதற்கு இதுவரை முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் நஞ்சுண்டன் தலைமையிலான அதிகாரிகள் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் இறைச்சி, பேன்சி, மளிகை என 132 கடைகள் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 50 நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

ரூ.18 கோடி நிலுவை

இதுகுறித்து நகராட்சி வருவாய் ஆணையாளர் காந்திராஜன் கூறியதாவது:-

ரூ.40 கோடி பாக்கி இருந்த நிலையில் தற்போது வரை ரூ.22 கோடி மட்டுமே வசூலாகி உள்ளது. ரூ.18 கோடி பாக்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மின்கட்டணம் மட்டும் கோடி கணக்கில் பாக்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே மீதமுள்ள நிலுவையை வசூலித்தால் தான் நகராட்சி நிர்வாக பணிகளை தொய்வின்றி செயல்படுத்த முடியும். இந்த நிதி ஆண்டு முடிவதற்குள் வாடகை வசூலிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story