வாட்ஸ் அப் புகார் மூலம் 134 கஞ்சா வியாபாரிகள் கைது போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தகவல்
குமரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் புகார் மூலம் 134 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் புகார் மூலம் 134 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
தமிழகத்தில் பள்ளிகள் வருகிற 12-ந் தேதி திறக்கிறது. பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் ஆட்டோக்களில் தான் பள்ளிக்கு செல்வதால் விபத்துக்களை தவிர்ப்பது குறித்து ஆட்டோ டிரைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீசை போல ஆட்டோ டிரைவர்களுக்கும் மக்களுடன் அதிக தொடர்பு இருக்கிறது. எனவே ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் தங்களது சட்டையில் போலீஸ் போல பெயர் பேட்ஜ் அணிய வேண்டும். ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அதிக அளவு ஏற்றி செல்லக்கூடாது. அரசு விதிப்படியே குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும். ஆட்டோ டிரைவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு புகார் இருந்தால் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் கஞ்சா தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக வாட்ஸ்அப் எண் (7010363173) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவித்தால் கஞ்சா விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
134 போ் கைது
குமரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் மூலம் இதுவரை வந்த புகாரின் அடிப்படையில் கஞ்சா வியாபாரிகள் 134 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். குற்றங்களை பொறுத்தமட்டில் தற்போது அதிகரித்து வருகிறது. செல்போன் செயலி மூலம் கடன் வாங்கி தருவதாக சிலர் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். அதை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் 158 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து காணப்படுகிறது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 மாதத்துக்குள் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
5-வது இடம்
முன்னதாக துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் பேசியபோது, "நாட்டில் கடந்த ஆண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். தமிழகத்தை பொறுத்த மட்டில் 14 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் விபத்தில் பலியானவர்களை ஒப்பிடும்போது தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில் அதில் பலியானவர் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் நம் நாட்டில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே விபத்துக்களை குறைக்க அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்" என்றார்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருண் பேசுகையில், "குடிபோதையில் வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அப்போது ஆட்டோவில் இன்னொரு நபர் இருந்தால் உடந்தையாக இருந்ததாக அவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதிக ஒலி எழுப்பும் ஆட்டோக்களை ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் விபத்துகளில் 26 பேர் பலியாகி உள்ளனர். இதில் 14 பேர் குடிபோதையில் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்" என்றார்.