137 விசைப்படகுகளுக்கு ரூ.4½ லட்சம் அபராதம்


137 விசைப்படகுகளுக்கு ரூ.4½ லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் மீன்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விதிகளை மீறி மீன்பிடித்த 137 விசைப்படகுகளுக்கு ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பகுதியில் மீன்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விதிகளை மீறி மீன்பிடித்த 137 விசைப்படகுகளுக்கு ரூ.4½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிரடி சோதனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடக்கே பாக் நீரிணைப்பு, தெற்கே மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் ஆகியவற்றில் மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் மேற்கண்ட கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் தடைகாலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான தடைகாலம் முடிவடைந்த பின்னர் தமிழக கடலோர மீன்பிடி ஒழுங்கு ஆணைய விதிகளை பின்பற்றி மீன்பிடித்து கரை திரும்புகின்றனரா என மீன்வளத்துறையினர் நடுக்கடலில் தொடர் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.4½ லட்சம் அபராதம்

இதன்படி கடந்த ஜூன் 15-ந் தேதி தொடங்கி தற்போது வரை 109 விசைப்படகுகள் டோக்கன் பெறாமலும், 5 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்திற்குள் மீன்பிடித்ததாக 21 விசைப்படகுகள், அனுமதி பெறாமல் கடலுக்குச் சென்றதாக 7 விசைப்படகுகள் என மொத்தம் 137 படகுகள் விதிகளை மீறியது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து மேற்கண்ட படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.4 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றும் விதிகளை மீறும் படகுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். . இந்த தகவலை ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story