குரூப்-7 தேர்வை 1,372 பேர் எழுதினர்
திண்டுக்கல் மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த குரூப்-7 தேர்வை 1,372 பேர் எழுதினர்.
இந்து சமய நிலையத்துறையில் காலியாக உள்ள 42 செயல் அலுவலர்கள் (நிலை-3) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-7 பி, தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 563 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
2 தாள்களுக்கு தேர்வு
இதையொட்டி தேர்வு மையங்களில் பலத்த சோதனைக்கு பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 25 பேருக்கு ஒரு கண்காணிப்பாளர், பறக்கும்படை நியமிக்கப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டது. இதில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதல் தாளும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 2-ம் தாளும் தேர்வு நடைபெற்றது. இதில் முதல் தாள் தேர்வை 1,372 பேர் எழுதினர். 1,191 பேர் தேர்வு எழுத வரவில்லை.
இதேபோல் காலையில் முதல் தாளை எழுதியவர்களில் 7 பேர் மதியம் 2-வது தாளை எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயல்அலுவலர் நிலை-4 தேர்வு நடைபெற இருக்கிறது.