ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றம்
திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மத்திய மண்டலத்தில் ஒரே வாரத்தில் 1,383 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 28 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு தேடுதல் வேட்டை
திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் ஏராளமான ரவுடிகள், குற்றவாளிகள் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தனர். இவர்களை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை பிடிக்க கடந்த 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஒரு வாரம் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில், மத்திய மண்டலம் முழுவதுமாக மொத்தம் 1,383 பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் திருச்சியில் 77 பிடிவாரண்டு, புதுக்கோட்டையில் 122, கரூரில் 48, பெரம்பலூரில் 50, அரியலூரில் 266 பிடிவாரண்டும், தஞ்சாவூரில் 308, திருவாரூரில் 303, நாகப்பட்டினத்தில் 37, மயிலாடுதுறையில் 102-ம் அடங்கும்.
குண்டர் சட்டத்தில் 28 பேர் கைது
குறிப்பாக செக் மோசடி வழக்குகளில் 102 பிடிவாரண்டு, ஜாமீனில் விடுவிக்கக்கூடிய வழக்குகளில் 10 பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன் 40 ரவுடிகள் மீது இருந்த பிடிவாரண்டு நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொலை, போக்சோ வழக்குகள் மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய 28 குற்றவாளிகள் கடந்த 7 நாட்களில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் மத்திய மண்டலத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில், 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரவுடிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கட்ட பஞ்சாயத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.