மதுரை நத்தம் மேம்பாலத்தில் மோட்டார்சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 14 கல்லூரி மாணவர்கள் கைது


மதுரை நத்தம் மேம்பாலத்தில்  மோட்டார்சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 14 கல்லூரி மாணவர்கள் கைது
x

மதுரை நத்தம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 14 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


மதுரை நத்தம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட 14 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் சாகசம்

மதுரையில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதனை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இதற்காக அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்வது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் நரேந்திரன்நாயர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள நத்தம் மேம்பாலத்தில் வாலிபர்கள் சிலர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதில் ஈடுபடுபவர்களை பிடிக்க இரவு நேரங்களில் மேம்பாலத்தில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டனர்.

14 மாணவர்கள் கைது

இதற்கிடையில் சம்பவத்தன்று அதே போன்று இரவு 11 மணிக்கு மேல் நத்தம் மேம்பாலத்தில் 9 மோட்டார் சைக்கிளில் 14-க்கும் மேற்பட்ேடார் சாகசத்தில் ஈடுபட்டு இருந்தனர். அதை கண்ட போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் செல்லூர் முகமதுசலீம், உத்தங்குடி ஹைதர்அலி, அப்துல்அஜிஸ், சல்மான்கான், புதூர் முகமதுஅசிக், சையது சர்புதீன், எஸ்.அப்துல்ரகுமான், முகமதுஇப்ராகிம், முகமதுஅப்துல்ஹக்கீம், எம்.அப்துல்ரகுமான், அப்துல்ரசாக், முகமது சம்சுஜாவித், அய்யர்பங்களா ஆனந்தகுமார், சிம்மக்கல் விஷ்ணு உள்ளிட்டோர் என்பதும், இவர்கள் அனைவரும் 19 வயது முதல் 22 வயது உடைய கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் வார இறுதி நாட்களில் மட்டும் நத்தம் மேம்பாலத்தில் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக சென்று வருபவர்களுக்கு பரிசு என்று கூறி இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர், அவர்கள் ஓட்டி வந்த 9 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர். இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.


Related Tags :
Next Story