படகு என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவிக்கும் 14 மீனவர்கள்


படகு என்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவிக்கும் 14 மீனவர்கள்
x

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் 14 மீனவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது படகு பழுதானதால் நடுக்கடலில் 14 மீனவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து வருகின்றனர்.

படகு பழுது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் அசிசியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றில் 14 மீனவர்கள் கடந்த 18-ந் தேதி கேரள மாநிலம் கொச்சின் துறைமுக பகுதியில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே பாம்பனில் இருந்து மீன் பிடிக்க சென்ற இந்த ஆழ்கடல் மீன்பிடி படகு என்ஜின் பழுதாகி சரி செய்ய முடியாமல் படகுடன் 14 மீனவர்கள் நடுக்கடலில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாக படகின் உரிமையாளர் ராமநாதபுரம் மீன்துறை இணை இயக்குனருக்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 18-ந் தேதி கொச்சின் துறைமுகத்திலிருந்து எனக்கு சொந்தமான ஆழ்கடல் மீன்பிடி படகில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மற்றும் ஆந்திரா, காரைக்கால் பகுதியை சேர்ந்த 14 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த படகானது கொச்சின் துறைமுகத்திலிருந்து சுமார் 300 நாட்டக்கல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் பழுதாகி நின்று, அதை சரி செய்ய முடியாமல் மீனவர்கள் படகில் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து வருகின்றனர்.

மீட்க வேண்டும்

நடுக்கடலில் என்ஜின் பழுதாகி தவிக்கும் படகு மற்றும் அதில் உள்ள 14 மீனவர்களையும் மீட்டுக்கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கேரளா கடல் பகுதியில் உயிருக்கு போராடிய நிலையில் படகுடன் 14 மீனவர்கள் தவித்து வருவது அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.



Next Story