நீடாமங்கலத்தில், கடைகள் மீது தாக்குதல் நடத்திய 14 பேர் கைது
நீடாமங்கலத்தில், கடைகள் மீது தாக்குதல் நடத்திய 14 பேர் கைது
கொலை செய்யப்பட்ட ராஜ்குமாரின் உடலை எடுத்து செல்லும் போது நீடாமங்கலத்தில் கடைகள் மீது தாக்குதல் நடத்திய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெட்டிக்கொலை
நீடாமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளராக இருந்த ஒளிமதி நடேச.தமிழார்வன் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10-ந்தேதி நீடாமங்கலத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பூவனூர் ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்.
கடந்த 10-ந்தேதி பூவனூர் ராஜ்குமார் திருவாரூர் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனை முடிந்து 11-ந்தேதி ராஜ்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வணிக வளாகத்தின் கண்ணாடிகள் உடைப்பு
திருவாரூரிலிருந்து பூவனூருக்கு அமரர் ஊர்தியில் அவரது உடல் எடுத்து செல்லும் வழியில் ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் நீடாமங்கலத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது நீடாமங்கலம் மேலராஜவீதியில் தனியார் வணிக வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வணிகவளாகத்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அதன் உரிமையாளர் முகமதுஹசாலி (வயது59) என்பவர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
14 பேர் கைது
இதில் தொடர்புடைய புதுத்தேவங்குடியை சேர்ந்த முரளி (26), தேவங்குடியை சேர்ந்த விக்னேஷ் (26), சிவராஜ் (27), வலங்கைமான் கீழத்தெருவை சேர்ந்த ராம்குமார் (25), அருண்பாண்டியன் (28), வலங்கைமான் கோவில்பத்து கீழத்தெருவை சேர்ந்த ராஜேஷ் (32), ராஜ் (29), பிரபாகரன் (32), வலங்கைமான் அரியமங்கலம் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகன்ராஜ் (27), திருக்களம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லத்துரை (45), வடகோவனூர் தெற்குத்தெருவை சேர்ந்த பாரதி (36) ஆகிய 11 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் தனியார் ஆங்கில மருந்தகம் ஒன்றிலும் தாக்குதல் நடந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் நீடாமங்கலத்தை சேர்ந்த முகமது கியாசுதீன் (45) என்பவர் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடைய தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த நக்கீரன் (19), ராயபுரம் நடுத்தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் (26), சோழபாண்டி தாமரைக்குளம் தெருவை சேர்ந்த பிரதீப் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.