செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 14 பேர் மீட்பு: 2 பேர் கைது


செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 14 பேர் மீட்பு: 2 பேர் கைது
x

கிருஷ்ணராயபுரம் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த 14 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

செங்கல் சூளையில் சோதனை

சத்தீஸ்கர் மாநிலம், நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 12- 14 வயதுடைய 3 சிறுமிகள், 4 ஆண்கள், 7 பெண்கள் உள்பட 14 பேர் கிருஷ்ணராயபுரம் அருகே வீரராக்கியத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்தனர். இதில் 3 சிறுமிகளை காணவில்லை என அந்த நாரணபுரி மாவட்ட போலீசாரிடம் அவர்களது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த மாவட்ட போலீசார் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பார்த்ததில் கரூர் மாவட்டத்தில் 3 சிறுமிகளும் இருப்பது தெரியவந்தது. பின்னர் கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில், கரூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், சத்தீஸ்கர் மாநில சமூக நலத்துறை அதிகாரிகள், மாயனூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வீரராக்கியத்தில் உள்ள செங்கல் சூளையில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

14 பேர் மீட்பு

அப்போது செங்கல் சூளையில் நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 சிறுமிகள் கொத்தடிமைகளாக வேலை பார்த்தது தெரியவந்தது. இதுகுறித்து தெற்கு ரங்கநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த குழுவினர் 3 சிறுமிகளையும் மீட்டனர். அப்போது மற்ற 11 பேரும் எங்களுக்கு வார அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், சுதந்திரமாக வெளியில் சென்று வர வேண்டும் போன்ற விருப்பத்திற்கு முரண்பாடாக எங்களையும் கொத்தடிமைகளாக பணிபுரிய வைத்துள்ளனர். அதனால் எங்களையும் மீட்டு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களையும் போலீசார் மீட்டனர். இந்த சோதனையில் 3 சிறுமிகள் உள்பட 14 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்தபோது மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2 பேர் கைது

இதையடுத்து 14 பேரை கொத்தடிமைகளாக வேலை பார்க்க வைத்தது தொடர்பாக கிருஷ்ணராயபுரம் பூஞ்சோலை புதூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்கிற பாண்டியன் (வயது 57), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் தேவா என்கிற தேவேந்திர குமார் (40) ஆகிய 2 பேரையும் மாயனூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் கிருஷ்ணராயபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story