கோவில்களில் 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்
வேலூர் மண்டலத்தில் உள்ள கோவில்களில் 14 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
கோவில்களில் திருமணம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். இதற்கான செலவை கோவில்களே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஏழை, எளியவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செலவின தொகை தற்போது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் திருமண வயதை பூர்த்தி அடைந்த ஜோடிகள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து கோவிலில் திருமணம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்படும். இவ்வாறு கோவில்களில் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு பதிவு திருமணசான்றிதழ் வழங்கப்படுகிறது.
14 ஜோடிகளுக்கு...
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மண்டல இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நேற்று 14 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. அவர்களுக்கு 4 கிராம் தங்கம், மணமகன், மணமகள் ஆடை, 20 பேருக்கு உணவு, மாலை, பீரோ, மெத்தை, கட்டில், தலையணை உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களுக்கான செலவின தொகையை இந்து சமய அறநிலைத்துறை ஏற்றுக்கொண்டது.
வேலூர் மாவட்டத்தில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோவில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில், குடியாத்தம் கெங்கையம்மன் கோவில்களில் தலா ஒரு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 திருமணம் நடந்தது.
வேலூர் மண்டலத்தில் நேற்று ஒரேநாளில் 14 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களுடன் கோவில்களில் இலவச திருமணம் நடைபெற்றது. இலவச திருமணம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.