வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை பறிப்பு
மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டது.
திருமங்கலம்
மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டது.
வீட்டில் தூங்கிய பெண்
திருமங்கலம் அருகே உள்ள கண்டுகுளத்தினை சேர்ந்தவர் துரைபாண்டி (வயது 55). முன்னாள் ராணுவவீரர். இவரது மனைவி நல்லம்மாள் (50). நேற்று முன்தினம் இரவு நல்லம்மாள் வழக்கம் போல் வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 1 மணியளவில் கருப்பு டவுசர், பனியன் மட்டும் அணிந்த மர்மநபர் வீட்டுக்குள் புகுந்து நல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டும், அருகில் இருந்த செல்போனை எடுத்து கொண்டும் தப்பினார்.
இது குறித்து நல்லம்மாள் கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடிவருகின்றனர்.
நகை பறிப்பு
மதுரை பரவை கம்பன் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி செல்வராணி (39). சம்பவத்தன்று இவர், மொபட்டில் திண்டுக்கல் மெயின் ரோடு விளாங்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் திடீரென செல்வராணியின் கழுத்தில் இருந்த 5½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் கூடல்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ேபாலீசார் விசாரணை
ராஜபாளையம் அருகே உள்ள பெரியசுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் தர்மர். இவரது மனைவி விக்னேஸ்வரி (37). இவர் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் பணிமுடிந்து ராஜபாளையம் செல்ல பஸ் ஏற டி.புதுப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் விக்னேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்து விக்னேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர்.