ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு


ஓமலூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து 14 பவுன் நகை திருட்டு
x

ஓமலூர் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது, நள்ளிரவில் வீடு புகுந்து 14 பவுன் நகை திருடப்பட்டது.

சேலம்

ஓமலூர்:

மூதாட்டி

ஓமலூரை அடுத்த மாட்டுக்காரனூர் மைலபாளையம் மோளிகாடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 75). இந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். கந்தசாமி இறந்து விட்டார். 3 மகள்களும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி லட்சுமி தனியாக வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமி வீட்டின் வராண்டாவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது காற்றுக்காக அவர் கதவை திறந்து வைத்து தூங்கினார். நள்ளிரவில் வீட்டில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அப்போது லட்சுமி எழுந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

14 பவுன் நகை திருட்டு

இதனால் லட்சுமி சத்தம் போட்டார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் சுற்றுச்சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். லட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறகப்பட்டு, அதில் இருந்த தங்க சங்கிலி, வளையல், கம்மல், மோதிரம் என 14 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன.

இதுகுறித்து ஓமலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து 14 பவுன் நகைகள் திருடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story