சாராய விற்பனையை தடுக்க 14 தனிப்படைகள் அமைப்பு


சாராய விற்பனையை தடுக்க 14 தனிப்படைகள் அமைப்பு
x

வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தெரிவித்தார்.

வேலூர்

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

272 பேர் கைது

வேலூர் மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த மே மாதம் 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்ட சாராய வேட்டையில் 55 ஆயிரத்து 900 லிட்டர் சாராய ஊறல், 13 ஆயிரத்து 858 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 110 கிலோ வெல்லம், 870 கிலோ சர்க்கரை, 3 ஆயிரத்து 372 மது பாட்டில்கள் மற்றும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் விற்றது, காய்ச்சியது தொடர்பாக 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 272 பேரை கைது செய்துள்ளோம். மேலும் 15 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளோம். சாராய வழக்கு தொடர்பாக 112 பேரை தேடி வருகிறோம்.

14 சிறப்பு தனிப்படைகள்

சாராய வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சாராயம் காய்ச்சுவது, விற்பனை, கடத்துவதை தடுக்க 14 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அல்லேரி, சாத்கர், ஜார்தான்கொல்லை போன்ற மலைப்பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மலை பகுதியில் உள்ள கிராமங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

சாராய கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, பின்னர் மனம் திருந்திய 219 பேரின் மறுவாழ்வுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.65 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோட்டீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்


Next Story