குமரியில் மேலும் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மேலும் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மேலும் 1.40 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்துகிறார்கள்.
மகளிர் உரிமை தொகை
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டு தாரர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டன. ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 468 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை.
இதற்கிடையே பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்பங்களில் பெயர், முகவரி உள்ளிட்ட சில குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் முதற்கட்டமாக 70 ஆயிரம் விண்ணப்பங்களை அதிகாரிகள் கள ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த பணியில் கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
1.40 லட்சம் விண்ணப்பங்கள்
இந்த நிலையில் மேலும் 1.40 லட்சம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுடன் நேரடியாக வீடுகளுக்கு சென்று கள ஆய்வு செய்யும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
அதிகாரிகள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று கள ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு ரேஷன் கடைக்கு உட்பட்ட பகுதியில் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கள ஆய்வு பணியை முடிப்பதற்கு இன்னும் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. கள ஆய்வுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் போக மீதமுள்ள விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.