அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதா கட்சியினர் 142 பேர் கைது


தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதா கட்சியினர் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜனதா கட்சியினர் 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

சசிகலாபுஷ்பா

பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் சசிகலாபுஷ்பா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி மேயராகவும், எம்.பி.யாகவும் இருந்து உள்ளார். இவரது வீடு தூத்துக்குடி தபால் தந்தி காலனி 8-வது தெருவில் உள்ளது. நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம ஆசாமிகள் 13 பேர் திடீரென வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதே போன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள், நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதனை தொடர்ந்து பா.ஜனதா கட்சியினர் திரண்டு வந்து போராட்டம் நடத்த முயன்றனர். மேலும் வீட்டை தாக்கி சேதப்படுத்தியவர்களை கைது செய்யாவிட்டால் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தனர்.

முற்றுகை முயற்சி

இதைத் தொடர்ந்து நேற்று காலையில் பா.ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தக்கூடும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் குறிஞ்சிநகரில் உள்ள பா.ஜனதா தெற்கு மாவட்ட அலுவலகத்துக்கு பா.ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி வந்தார். அங்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அங்கு திரண்டு இருந்த பா.ஜனதா கட்சியினர் அமைச்சர் கீதாஜீவன் வீட்டை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்கள் எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகே வந்த போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி உள்ளிட்ட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது

அதே நேரத்தில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் உமரிசத்தியசீலன் மற்றும் பா.ஜனதா கட்சியினர் சிலர் போலீஸ் தடுப்புகளை மீறி எட்டயபுரம் ரோடு வழியாக போல்பேட்டையில் உள்ள அமைச்சர் கீதாஜீவன் வீட்டை நோக்கி முன்னேறினர். இதனால் போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் அதிரடிப்படை வீரர்களுடன் விரைந்து சென்று போல்பேட்டை பகுதியில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனடியாக போலீசார் தயாராக வைத்த இருந்த 2 பேனர்களை தூக்கி பிடித்தனர். அதில் நீங்கள் கூடி இருப்பது சட்டவிரோதமான கூட்டம், உடனடியாக கலைந்து செல்லுங்கள், இல்லாவிட்டால் கண்ணீர் புகையால் கலைக்க நேரிடும் என்றும், துப்பாக்கியால் சுட்டு கலைக்க நேரிடும் என்றும் எழுதப்பட்டு இருந்தன. தொடர்ந்து ஒலிபெருக்கியில் பேசிய போலீஸ் சூப்பிரண்டு, சட்டவிரோதமாக கூடி இருக்கிறீர்கள். வீட்டை தாக்கிய வழக்கு தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒருவரை பிடித்து உள்ளோம். நீங்கள் சட்ட விரோதமாக போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் கைது செய்வதாக அறிவித்தார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்து தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் மொத்தம் போராட்டத்தில் ஈடுபட்ட 142 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே கைது செய்து ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள திருமண மண்படத்தில் அடைக்கப்பட்டவர்கள், அனைவரையும் ஒரே மண்டபத்தில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டேட் வங்கி காலனி மெயின் ரோட்டில் மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். அதன்பிறகு அவர்களை தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்று அடைத்தனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story