கடலூர் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை 14,300 பேர் எழுதினர்
2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வை கடலூர் மாவட்டத்தில் 14,300 பேர் எழுதினர்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2022-ம் ஆண்டுக்கு நடத்தப்படும் 3,552 பணியிடங்களுக்கான 2- ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது.
இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 13,135 ஆண்கள், 3,642 பெண்கள், 3-ம் பாலினத்தவர்கள் 4 பேர் என 16 ஆயிரத்து 781 பேர் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் கல்லூரி, எஸ்.குமராபுரம் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, கடலூர் சி.கே.மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 12 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
போலீசார் சோதனை
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும் என்றாலும் தேர்வர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்வர்கள் காலை 7.30 மணிக்கே வர தொடங்கினர். தொடர்ந்து 8 மணிக்கு தேர்வர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தேர்வர்களை தேர்வு மையங்களுக்கு முன்பு நின்ற போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர்.
ஹால்டிக்கெட் மட்டுமின்றி, அதோடு ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதால், அனைத்து தேர்வர்களும் அதற்கான ஏற்பாடுகளுடன் வந்தனர். அவற்றை போலீசார் சோதனை செய்து, தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். சில தேர்வு மையங்களுக்கு முன்பு நீண்ட வரிசையில் தேர்வர்கள் நிறுத்தப்பட்டு, ஒவ்வொருவராக சோதனை செய்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
14,300 பேர் தேர்வு எழுதினர்
அப்போது அவர்கள் செல்போன், புளூடூத் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை வைத்து உள்ளார்களா? என்று தீவிரமாக சோதனை செய்தனர், செல்போனை வெளியில் வைத்து செல்ல தனி இடம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வர்கள் தங்களது செல்போன் உள்ளிட்ட பொருட்களை பணியில் இருந்த போலீசாரிடம் கொடுத்து விட்டு சென்றனர்.
அதையடுத்து தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 12.40 மணி வரை நடந்தது. இருப்பினும் 10 மணிக்குள் வந்த அனைவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிந்த பிறகு ஒட்டுமொத்தமாக அனைவரும் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தேர்வை 14 ஆயிரத்து 300 பேர் எழுதினர். 2 ஆயிரத்து 481 பேர் தேர்வு எழுத வரவில்லை.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
முன்னதாக தேர்வு மையத்தில் யாராவது காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்பதை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மையங்களில் இருந்த போலீசாருக்கும் உரிய அறிவுரைகளை வழங்கினர். தேர்வையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 12 தேர்வு மையங்களிலும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.