தர்மபுரி மாவட்டத்தில் 146 பட்டாசு கடைகளில் விற்பனை மும்முரம்


தர்மபுரி மாவட்டத்தில் 146 பட்டாசு கடைகளில் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 23 Oct 2022 12:30 AM IST (Updated: 23 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் முழுவதும் 146 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாசு கடைகளில் விற்பனை மும்முரமாக நடந்தது. விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

தர்மபுரி

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 146 பட்டாசு கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பொது முடக்கத்தால் தீபாவளி பட்டாசு கடைகள் திறப்பதற்கு வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. கொரோனா அச்சுறுத்தல் குறைந்து பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதால், பட்டாசு கடைகள் திறப்பதற்கு இந்த ஆண்டு வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர்.

இதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கூடுதல் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் மும்முரம் அடைந்துள்ளது. ொதுமக்கள் கூட்டம், கூட்டமாக பட்டாசு மற்றும் மத்தாப்பு ரகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அவ்வப்போது பெய்யும் திடீர் மழையால் வியாபாரம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். தர்மபுரி நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் பட்டாசுகளை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.

விபத்தில்லா தீபாவளி

பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story