சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1490 கன அடி நீர்வரத்து
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1490 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உயர்ந்துள்ளது.
தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1490 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 101.15 அடியாக உயர்ந்துள்ளது.
சாத்தனூர் அணை
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை தமிழகத்தின் புகழ்பெற்ற அணைகளில் ஒன்றாக உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 7,321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும்.
இந்த அணையில் இருந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி முதல் பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
வினாடிக்கு 1490 கன அடி நீர்வரத்து
இதனால் சாத்தனூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக சாத்தனூர் அணை பகுதியில் 9.20 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1490 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது இதனால் அணை நீர்மட்டம் தற்போது 101.15 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது 3,926 மில்லியன் கன அடி நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. பாசன கால்வாய் வழியாக பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.