தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 15 நாள் அவகாசம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு


தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 15 நாள் அவகாசம்; ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Sept 2023 2:45 AM IST (Updated: 27 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 15 நாள் அவகாசம் விதித்து ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

தேனி

தேனியில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள 15 நாள் அவகாசம் விதித்து ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் நகர் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் உருவாகும் குப்பைகள் கொட்டுதல், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துதல், பேனர் வைத்தல், தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்பாடு போன்றவற்றை ஒழுங்குபடுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்துக்கு நகராட்சி ஆணையாளர் கணேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் ஆகியோர் தலைமை தாங்கினர். தாசில்தார் சரவணபாபு, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமமூர்த்தி, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை பொறியாளர் தேவநாதன், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் வணிகர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

15 நாட்கள் அவகாசம்

இந்த கூட்டத்தில், தேனி அல்லிநகரம் நகராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லை என்றால் 15 நாட்களுக்கு பிறகு நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று ஆணையாளர் கூறினார். அதற்கு வணிகர்கள் தீபாவளி கால கட்டம் என்பதால் ஒருமாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், பொதுமக்கள், பாதசாரிகள் நலன் கருதி 15 நாட்களுக்கு மேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். மக்காத குப்பைகளை வாரம் ஒருமுறை வழங்கலாம். கண்ட இடங்களில் பேனர் வைத்து போக்குவரத்து இடையூறு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் கூட்டத்தில் வழங்கப்பட்டன.


Next Story