குமரி வனப்பகுதியில் 15 யானைகள்


குமரி வனப்பகுதியில் 15 யானைகள்
x

குமரி வனப்பகுதியில் 15 யானைகள் இருப்பதை கணக்கெடுப்பின் போது வன குழுவினர் பார்த்துள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி வனப்பகுதியில் 15 யானைகள் இருப்பதை கணக்கெடுப்பின் போது வன குழுவினர் பார்த்துள்ளனர்.

யானைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 3 நாட்கள் நடந்தது.

குமரி மாவட்டத்தில் வண்ணாத்திப்பாறை, களியல், கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, மருதம்பாறை, அசம்பு போன்ற பகுதிகளில் யானைகள் கணக்கெடுப்பு நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையில் 80 வன பணியாளர்கள், 20 தன்னார்வலர்கள் இதில் ஈடுபட்டனர். அதாவது வனப்பகுதிகளை 30 சிறு அலகுகளாக பிரித்து 30 குழுக்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

கூட்டம் கூட்டமாக...

முதல் நாளன்று யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. அந்த வகையில் காட்டுக்குள் சென்ற வன குழுவினர் பல கிலோ மீட்டர் தூரம் காட்டில் நடந்து சென்றும், தொலைநோக்கு கருவிகள் மூலமும் யானைகளை பார்த்தனர். அப்போது களியல் உள்ளிட்ட 2 இடங்களில் 4 யானைகள் இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து 2-வது நாளன்று யானைகளின் லத்திகளை வைத்து நடந்த கணக்கெடுப்பில் காடுகளில் சுற்றித்திரியும் யானைகள் எத்தனை உள்ளன என்று கணக்கிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து இறுதி நாளன்று நீர்நிலைகளுக்கு வரும் யானைகளை நேரில் பார்த்து கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதற்காக வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளில் வனத்துறையினர் ரகசியமாக முகாமிட்டு இருந்தனர். அப்போது அசம்பு வன பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. அதில் ஒரு கூட்டத்தில் 7 யானைகளை வன குழுவினர் நேரில் பார்த்தனர். இதே போன்று மற்றொரு நீர் நிலையிலும் 4 யானைகளை வன குழுவினர் பாா்த்துள்ளனர். இதனையடுத்து கணக்கெடுப்பு பணியில் குமரியில் 15 யானைகள் இருப்பது தெரிய வந்தது. கணக்கெடுப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து காட்டுக்குள் முகாமிட்டு இருந்த வன குழுவினர் அலுவலகத்துக்கு திரும்பினர்.

வன அதிகாரி

இதுபற்றி வன அதிகாரி இளையராஜா கூறுகையில், "குமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்த யானைகள் கணக்கெடுப்பு முடிவுக்கு வந்தது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த கணக்கெடுப்பு இந்த ஆண்டு கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கணக்கெடுப்பாக நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் பெறப்பட்ட தரவுகள் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு முழுவது தரவுகள் முதுமலை புலிகள் காப்பக இயக்குனரால் ஆய்வு செய்யப்பட்டு இறுதி எண்ணிக்கை அறிவிக்கப்படும். குமரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த யானைகள் கணக்கெடுப்பின் போது 14 முதல் 20 யானைகள் வரை வசிப்பது தெரியவந்தது" என்றார்.


Next Story