ரூ.15 லட்சம் மதுபான மூலப்பொருட்கள் பறிமுதல்
கொட்டாம்பட்டியில் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதுபான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்தனர
கொட்டாம்பட்டியில் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதுபான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
போலி மதுபானம்
அரியலூரில் போலி மதுபானம் விற்பனை தொடர்பாக போலீசார் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அதிரடி சோதனை செய்தனர். அதில் போலி மதுபானம் விற்பனை செய்த திருச்சி லால்குடி காணகிளியநல்லூரை சேர்ந்த மோகன்(வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 350 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியான லால்குடி பகுதியை சேர்ந்த ஜான்சன்(35) என்பவரை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய நுண்ணறிவு பிரிவு சூப்பிரண்டு ஜெயந்தி உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி மதுபானம் தயாரிக்கும் மூல பொருட்கள் கொட்டாம்பட்டியில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்திய நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சத்யராஜ், பாண்டியன் மற்றும் போலீசார் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள பூபதி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.15 லட்சம் மூலப்பொருட்கள் பறிமுதல்
போலி மதுபானங்கள் தயாரிக்க வைத்திருந்த 210 லிட்டர் எரிசாராயம், 665 லிட்டர் போலி மதுபானம், கெமிக்கல், ஆல்கஹாலிக் மீட்டர், காலி பாட்டில்கள் மூடிகள், ஸ்டிக்கர் உள்பட ரூ.15 லட்சம் மதிப்புள்ள போலி மதுபான மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். மத்திய நுண்ணறிவு போலீசார் இதுதொடர்பாக தென்னந்தோப்பு உரிமையாளர் பூபதியை பிடித்து விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் திருப்பாசேத்தியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு கோழி பண்ணை நடத்த வாடகைக்கு இடம் கேட்டுள்ளார் எனவும் அதற்கு மறுத்து விட்டதாகவும் பின்னர் யார் இந்த போலி மதுபான மூல பொருட்களை இங்கு கொண்டு வந்து வைத்து சென்றுள்ளனர் என தெரியவில்லை என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மேலூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஜெயந்தியிடம் நுண்ணறிவு போலீசார் மூலப்பொருட்களை ஒப்படைத்தனர். இது குறித்து தென்னந்தோப்பு உரிமையாளர் பூபதியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.