காணாமல் போன 15 குழந்தைகள் மீட்பு


காணாமல் போன 15 குழந்தைகள் மீட்பு
x
தினத்தந்தி 23 May 2023 4:45 AM IST (Updated: 23 May 2023 4:46 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை ரசிக்க வந்த போது அங்குள்ள கூட்டத்தில் காணாமல் போன 15 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியை ரசிக்க வந்த போது அங்குள்ள கூட்டத்தில் காணாமல் போன 15 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மலர் கண்காட்சி

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை கண்டு ரசிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், அவர்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களுடன் வந்து செல்கிறார்கள்.

கண்காட்சியில் இடம்பெற்ற பிரமாண்ட மயில் சிற்பம் மற்றும் சிறப்பு அலங்காரங்களை கண்டு ரசித்து வருகின்றனர். தொடர்ந்து பூங்கா பெரிய புல்வெளி மைதானத்தில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்குள்ள புல்வெளியில் குழந்தைகள் பலூன்கள், பந்துகளை வைத்து ஓடி விளையாடுகின்றனர். அவ்வாறு விளையாடும் குழந்தைகள் பெற்றோர் இருக்கும் இடம் தெரியாமல், நீண்ட தூரம் சென்று விடுகின்றனர்.

15 குழந்தைகள் மீட்பு

பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சில குழந்தைகள் காணாமல் சென்றனர். தொடர்ந்து பெற்றோர்கள் பூங்காவில் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் அவர்கள் ஊட்டி போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டத்திற்கு மத்தியில், காணாமல் போன குழந்தைகளின் பெயர், அணிந்திருக்கும் உடை, அடையாளங்களை கூறி மைக்கில் அறிவிப்பு வெளியிட்டனர். பின்னர் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர்களான சுரேஷ்-லட்சுமி தம்பதியின் 1½ வயது குழந்தை நேற்று முன்தினம் பூங்காவில் காணாமல் போனது. தொடர்ந்து விழா மேடையில் உள்ள பெரிய திரையில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தோம். குழந்தையை வாங்கிய பெற்றோர், அன்பு முத்தம் கொடுத்து மகிழ்ந்த காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

இதேபோல் மலர் கண்காட்சி தொடங்கிய 3 நாட்களில் மட்டும் காணாமல் போன 15 குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து உள்ளோம். மேலும் மைசூரை சேர்ந்த தம்பதி தவறவிட்ட 2 பவுன் நகை, மற்றும் 5 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story