லாரி மீது வேன் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம்


லாரி மீது வேன் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம்
x

வேலூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 15 பேருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர்

லாரி மீது வேன் மோதல்

திருப்பூர் அருகே உள்ள ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது மனைவி தமிழ்செல்வி, மகன் கோகுலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் 15 பேருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வேனில் இரவு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து புறப்பட்டனர்.

வேனை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஓட்டினார். நள்ளிரவு 1 மணியளவில் வேன் வேலூரை அடுத்த அன்பூண்டி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது வேனின் முன்பாக கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று பீகார் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை அரியானா மாநிலத்தை சேர்ந்த அர்ஷத்கான் ஒட்டி சென்றார். வேன் முன்னால் சென்ற லாரியை வேகமாக முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக லாரியின் பின்பகுதியில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனின் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.

15 பேர் படுகாயம்

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மகேந்திரன், தமிழ்செல்வி, கோகுலகிருஷ்ணன், மற்றும் 3 குழந்தைகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் சந்தோஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயம் அடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் கிரேன் மூலம் வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்குப்பதிந்து வேன் மற்றும் லாரி டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story