15 கர்ப்பிணிகள் எச்.ஐ.வி. தொற்றால் பாதிப்பு
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 15 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 15 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
வேலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா, வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு பிரிவு திட்ட மேலாளர் ஆனந்த்சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு, எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்குதல், ஆட்டோவில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல், கையெழுத்து முகாம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுடன் அமர்ந்து கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறியதாவது:
15 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி.
வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப, நகர்ப்புற சுகாதார நிலையங்கள், நடமாடும் நம்பிக்கை மையம் என 44 இடங்களில் எச்.ஐ.வி. குறித்து ஆலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 16 லட்சத்து 31 ஆயிரத்து 139 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 17 ஆயிரத்து 981 பேருக்கு எச்.ஐ.வி. நோய் தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் 65,433 பேருக்கு ரத்த பரிசோதனை செய்ததில், 106 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டது. 2001-ம் ஆண்டில் 5.5 சதவீதமாக இருந்த எச்.ஐ.வி. தொற்று, இந்த ஆண்டு 0.16 சதவீதமாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு 20,415 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 15 கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டது. அவர்களுக்கு புதிய கூட்டு மருந்துகள் அளிக்கப்பட்டு தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் 2030-ம் ஆண்டிற்குள் புதிய எய்ட்ஸ் தொற்று பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது. இந்த இலக்கை நோக்கி மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து எய்ட்ஸ் தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.