ஓசூர் பகுதியில் கிலோ ரூ.4-க்கு விற்பனை: டிராக்டரால் 15 டன் முள்ளங்கி அழிப்பு
ஓசூர்:
ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி அடைந்து கிலோரூ.4-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் பயிரிட்டிருந்த 15 டன் முள்ளங்கிகளை டிராக்டரால் அழித்தார்.
காய்கறிகள் சாகுபடி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிபிளவர் உள்பட பல்வேறு வகையான காய்கறிகளும், பூக்களும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
மேலும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகளும் அதிகளவில் ஓசூர் வந்து காய்கறிகள் மற்றும் பூக்களை வாங்கி செல்கின்றனர். சில காய்கறிகள் சந்தைகளிலும் விற்பனை செய்யபடுகின்றன.
முள்ளங்கி விலை வீழ்ச்சி
இந்தநிலையில் ஓசூர் பகுதியில் முள்ளங்கி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் சந்தைகளில் முள்ளங்கி கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது முள்ளங்கி கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் முள்ளங்கி விலை குறைந்துள்ளது.
இதனிடையே கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை மட்டுமே முள்ளங்கி விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் முள்ளங்கி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 டன் அழிப்பு
ஓசூர் அருகே உள்ள ஆலூர் தின்னூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி என்பவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிரிட்டு இருந்தார். இதற்காக அவர் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தார். தற்போது முள்ளங்கி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முள்ளங்கியை அறுவடை செய்யும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் விவசாயி ராமமூர்த்தி தனது நிலத்தில் பயிரிட்டிருந்த 15 டன் அளவிலான முள்ளங்கிகளை டிராக்டரால் உழுது அழித்தார். மேலும் முள்ளங்கி விலை வீழ்ச்சியால் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை அழித்ததாக வேதனையுடன் தெரிவித்தார்.